Apr 18, 2014

உதயநிதி ஸ்டாலினுக்காக சந்தானம் திடீர் பிரச்சாரம்

தி.மு.கழக தலைவர் கருணாநிதியின் பேரனும், பொருளாளர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதிக்காக காமெடி நடிகர் சந்தானம் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார். இது தேர்தல் செய்தியாச்சேன்னு ரொம்ப யோசிக்காதீங்க பாஸ் சினிமா செய்திதான். இது கதிர்வேலன் காதல் படத்துக்கு பிறகு உதயநிதி நடிக்கும் படம் நண்பேண்டா. ஆர்.ஜெகதீஷ் இயக்குகிறார். நயன்தாரா ஹீரோயின். சந்தானம் காமெடியன். ஹாரிஸ் ஜெயராஜ் இசை. பாலசுப்பிரமணியம் கேமரா. உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்புகள் தீவிரமாக நடந்து வருகிறது. இது தேர்தல் காலம் என்பதால் படத்தின் பர்ஸ்ட் லுக்கை தேர்தல் எபெக்டோடு வெளியியிட்டிருக்கிறார் உதயநிதி. படத்தின் பின்னணியை பட யூனிட் வட்டாரத்தில் விசாரித்தபோது கிடைத்த தகவல் இது...

உதயநிதி நயன்தாராவை துரத்தி துரத்தி காதலிப்பார். பல ஆயிரம் சம்பளத்தில் வேலை பார்க்கும் நயன்தாரா, வெட்டி ஆபீசர் உதயநிதியை திரும்பிக்கூட பார்க்க மாட்டார். திடீர்னு மாஸ் அட்ராக்ஷன் வேணும்னா அரசியல்தான் ஒரே வழின்னு நண்பன் சந்தானம் அட்வைஸ் பண்ண உள்ளூர் அரசியலில் குதிக்கிறார் உதயநிதி. லோக்கல் பிரச்னைகளுக்காக போராடி வெற்றி பெறும் உதயநிதி, இதே பாணியை காதலுக்கும் செய்தால் என்ன என்று யோசிக்கிறார். நயன்தாராவிடன் காதல் கோரிக்கை வைத்து உண்ணாவிரம், ஆர்ப்பாட்டம், மறியல்னு பல அகிம்சை போராட்டங்களை நடத்துகிறார். அதுதான் பர்ஸ்ட் லுக் போட்டோவின் பின்னணி என்கிறார்கள்.

Apr 17, 2014

பூஜைக்கு ஸ்ருதிஹாசனை தேர்வு செய்தது ஏன்? ஹரி விளக்கம்

பொதுவாக ஹரி படங்களின் ஹீரோயின் குடும்ப பாங்கானவர்களாக இருப்பார்கள். ஆனால் ஹரி அடுத்து இயக்கவிருக்கும் பூஜை படத்தில் ஸ்ருதிஹாசன் ஹீரோயின். படத்தின் பர்ஸ்ட் லுக் படங்களை இப்போது ஹரி வெளியிட்டிருக்கிறார். அதில் ஸ்ருதிஹாசன் படு கவர்ச்சியாக இருக்கிறார். ஏன் இப்படி என்பதற்கும் ஹரி விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: படத்தின் கதை களம் கோவை. சென்னை மாதிரி அதுவும் வளர்ந்த நகரம் அங்கு மார்டன் டிரஸ்களில் பெண்களை சாதாரணமாக பார்க்கலாம். அப்படி ஒரு பெண்ணாக நடிக்கிறார் ஸ்ருதிஹாசன். மார்டனான ஒரு பொண்ணு தேவைப்பட்டாங்க. அதே நேரத்துல நம்ம ஊர் சாயல் இருக்கணும். அதுக்கு ஸ்ருதி தான் சாய்ஸ்னு முடிவு பண்ணி கதை சொன்னோம் உடனே ஓகே சொல்லிட்டாங்க.

வழக்கமான என்னோட படம் மாதிரி இல்லாம இதுல கொஞ்சம் மார்டனா லவ் போஷன் இருக்கும். ஹீரோவோடு ரொமான்ஸ், டுயட்டுன்னு இல்லாம படம் முழுக்க ஸ்ருதிக்கு வேலை இருக்கு. அவ்வளவு முக்கியமான கேரக்டர். படத்தோட கதை கோவையில் ஆரம்பித்து பீகார்ல முடியும். நாட்டுல இப்ப இருக்குற ஒரு முக்கியமான பிரச்னையை எதிர்த்து ஹீரோ போராடுகிற கதை. அதை என்னோட பாணியில் பேமிலி செண்டிமெண்டோடு சொல்கிறேன். 7 வருஷத்துக்கு முன்பு விஷாலுடன் தாமரபரணி பண்ணினேன். அப்போ அவர் ஆக்ஷன் ஹீரோவா மட்டும் இருந்தார். இப்போ பெர்பாமென்ஸ் ஆர்ட்டிஸ்டாவும் வளர்ந்திருக்கார். இரண்டுக்குமே பூஜையில் வேலை இருக்கு என்கிறார் ஹரி.

தெனாலிராமனுக்கு சிக்கல் தீர்ந்தது!!

வடிவேலு நடித்த தெனாலிராமன் படம் நாளை (ஏப்ரல் 18) ரிலீசாகிறது. இந்தப் படத்தில் மன்னர் கிருஷ்ணதேவராயரை காமெடியனாக சித்தரித்து அவமானப்படுத்தி இருப்பதாக சில தெலுங்கு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. சிலர் வழக்கும் போட்டனர். இந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 16) வடிவேலு, படத்தை எதிர்க்கும் தெலுங்கு அமைப்புகளை நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். "இது காமெடி படம்தான் படத்தில் கிருஷ்ணதேவராயரை உயர்வாகத்தான் காட்டியிருக்கிறோம்" என்றார். பிறகு தெலுங்கு அமைப்புகள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். சுமார் இரண்டு மணிநேரம் நடந்த பேச்சு வார்த்தைக்கு பிறகு இரு தரப்பினரும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

வடிவேலு

பேச்சு வார்த்தைக்கு பிறகு வடிவேலு நிருபர்களிடம் கூறியதாவது: உலக மொழி பேசும் அத்தனை பேரும் என் உடல் மொழியை ரசிக்கிறார்கள். தமிழ் மொழி தெரியாதவர்கள்கூட என்னை ரசிக்கிறார்கள். எனக்கு பகை மொழி எதுவும் கிடையாது. இதுவரை ஒரு படத்தில்கூட வல்கராகவோ, வன்முறையாகவோ நடிச்சதில்லை. இந்தப் படமும் யாருடைய மனதையும் புண்படுத்துகிற நோக்கில் எடுக்கவில்லை. பல் முளைக்காத குழந்தையில் இருந்து பல் விழுந்த கிழவன் வரை ரசிக்கிற மாதிரியான படம். தயவு செய்து இந்த படத்தை வைத்து மொழிச் சண்டைய உருவாக்காதீர்கள் என்று தமிழ் மக்கள் சார்பில் எல்லோரையும் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

தெலுங்கு அமைப்புகள்

தெலுங்கு அமைப்புகள் சார்பில் தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தி தலைவர் ஜெகதீஸ்வர ரெட்டி கூறியதாவது: எங்களின் சந்தேகங்களுக்கு வடிவேலு நல்ல முறையில் விளக்கம் அளித்தார். படத்தில் கிருஷ்ணதேவராயருக்கு 36 மனைவிகள் 52 குழந்தைகள் என்ற வசனத்தை நீக்க ஒத்துக் கொண்டார். படத்தின் டைட்டில் கார்டில் இது கற்பனை கதை யாரையும் புண்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டதல்ல என்ற வாசகத்தை போடவும் ஒத்துக் கொண்டார். படத்தை தெலுங்கு அமைப்புகளுக்கு போட்டுக்காட்ட வேண்டும் என்று கேட்டோம். அதற்கும் ஒத்துக் கொண்டார். இதனால் நாங்கள் சமரசமாகி விட்டோம். தமிழ்நாடு கவர்னர் ரோசையா இதில் தலையிட்டு அவர் அறிவுறுத்தியதின் பேரில் இந்த சமசரம் ஏற்பட்டுள்ளது. என்றார்

தடைவிதிக்க கோர்ட் மறுப்பு

இதற்கிடையில் படத்துக்கு தடைகேட்டு தெலுங்கு அமைப்புகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. தணிக்கை குழு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் "படத்துக்கு முறைப்படி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதில் முறைகேடு எதுவும் இல்லை" என்று கூறப்பட்டிருந்தது. படத்தின் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் "இது யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எடுக்கப்பட்ட படம் அல்ல. இது கற்பனை கதை" என்று கூறப்பட்டிருந்தது. இரண்டு மனுக்களையும் பரிசீலித்த நீதிபதி இரு மனுக்களையும் ஏற்றுக் கொண்டு படத்துக்கு தடைவிதிக்க முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.

ஒரு வழியாக தெனாலிராமன் எல்லா பிரச்னைகளையும் தீர்த்துவிட்டு நாளை வெளிவருகிறார். மக்கள் என்ன தீர்ப்பு தரப்போகிறார்கள் என்பது நாளை மாலை தெரிந்து விடும்.

Feb 28, 2014

வல்லினம் - விமர்சனம்

திருச்சியில் கல்லூரி ஒன்றில் நகுலும், கிருஷ்ணாவும் நண்பர்களாக படித்து வருகின்றனர். இருவரும் கூடைப்பந்து விளையாட்டில் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள். இவர்களுடைய விளையாட்டு அந்த கல்லூரியில் பிரபலம்.

இந்நிலையில், ஒருநாள் விளையாடிக் கொண்டிருக்கும்போது நகுல் அடிக்கும் பந்து எதிர்பாராத விதமாக கிருஷ்ணா நெஞ்சில் பட்டுவிட அந்த இடத்திலேயே கிருஷ்ணா இறந்து விடுகிறார். தன் நண்பன் மரணத்தை தாங்க முடியாத நகுல், அந்த கல்லூரியில் இருந்தே விலகுகிறார். மேலும், தன் நண்பன் சாவுக்கு காரணமான கூடைப் பந்தை இனிமேல் விளையாடக்கூடாது என்றும் முடிவெடுக்கிறார்.

அதன்படி, சென்னைக்கு வந்து ஒரு கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார். இதே கல்லூரியில் படிக்கும் மிருதுளா, சந்துரு ஆகியோர் நகுலுடன் நட்பு கொள்கிறார்கள். நாளடைவில் நகுலின் நடவடிக்கைகள் நாயகி மிருதுளாவிற்கு பிடித்துப்போக அவரை காதலிக்க ஆரம்பித்து விடுகிறார். நகுலும் அவளை காதலிக்கிறார்.

சந்துரு அந்த கல்லூரியில் கூடைப்பந்து விளையாட்டில் நன்கு தேர்ச்சி பெற்றவர். இருந்தும் தன்னுடைய அணியால் கல்லூரிக்கு இதுவரை ஒரு கோப்பைகூட பெற்றுத்தர முடியாத ஆதங்கத்தில் இருந்து வருகிறார்.

அதே கல்லூரியில் இறுதி ஆண்டில் படித்து வரும் மாணவர்கள் கிரிக்கெட் விளையாட்டில் கல்லூரியின் பெயரை நிலைநிறுத்திய தலைக்கணத்தில் இவர்களைப் பார்த்து கிண்டலடிக்கின்றனர். மேலும், கூடைப்பந்து விளையாட்டை தரக்குறைவாகவும் பேசுகின்றனர்.

இதனால் வெகுண்டெழும் நகுல், சந்துருவுடன் இணைந்து கூடைப்பந்து விளையாட்டின் மகத்துவத்தை அவர்களுக்கு புரிய வைக்க முடிவெடுக்கிறார். இறுதியில், கூடைபந்து விளையாட்டில் நகுல் தன்னுடைய முழு திறமையைப் பயன்படுத்தி கல்லூரிக்கு கோப்பையை வாங்கிக் கொடுத்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

இப்படத்தின் நாயகன் நகுல், ஒரு கூடைப்பந்து வீரருக்குண்டான எல்லா தகுதியும் இவருக்கு இருப்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார். மாறுபட்ட நடிப்பில் எல்லோரையும் கவர்ந்திருக்கிறார். கூடைப்பந்து விளையாடும்போது ஒரு அனுபவ வீரரைப் போலவே விளையாடியிருக்கிறார். கதை முழுவதும் இவரை மையப்படுத்தியே நகர்வதால், நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரம் இவருடையது. அதை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்.

நாயகி மிருதுளாவுக்கு நாயகனை காதலிப்பது மட்டுமே வேலை என்பதால், இப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புக் குறைவே. இருந்தாலும் பாடல் காட்சிகளில் கவர்ச்சி காட்டி ரசிக்க வைத்திருக்கிறார். திருச்சியில் நண்பராக வரும் கிருஷ்ணா, அங்கு பயிற்சியாளராக வரும் நடிகர் ஆதி ஆகியோர் சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கின்றனர். சென்னையில் நண்பராக வரும் சந்துருவும், நடிப்பில் நகுலுக்கு போட்டி போட்டிருக்கிறார்.

கல்லூரி முதல்வராக வரும் ஒய்.ஜி.மகேந்திரன், பயிற்சியாளராக வரும் அதுல் குல்கர்னி, கதாநாயகியின் தந்தையாக வரும் ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் நடிப்பில் மிளிர்கின்றனர்.

தமிழில் கிரிக்கெட், கபடி போன்ற விளையாட்டுக்களை மையப்படுத்தி படங்கள் வந்திருக்கிறன. ஆனால், கூடைப்பந்து விளையாட்டை வைத்து தமிழில் இதுவரை ஒரு படம்கூட வந்ததில்லை. அதை இயக்குனர் அறிவழகன் சரியாக புரிந்துகொண்டு, அழகாக படமாக்கியதற்காக பாராட்டலாம். நட்பை மையப்படுத்தி, அதில் விளையாட்டை புகுத்தி படத்தை விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார்.

கே.எஸ்.பிரபாகரன் ஒளிப்பதிவில் கூடைப்பந்து விளையாட்டை அழகாக படமாக்கியிருக்கிறார். இவருடைய கேமரா கண்கள் படத்தின் காட்சிகள் நம் கண்களை உறுத்தாமல் இருக்க ரொம்பவும் விளையாடியிருக்கிறது. பாடல் காட்சிகளில் இவரது ஒளிப்பதிவு குளுமையாக இருக்கிறது. தமன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையும் ஓ.கே. ரகம்தான்.

Jan 20, 2014

நஸ்ரியாவுக்கு திருமணம் நிச்சயமானது



நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே திருமணமாகி செட்டிலாக போகிறார் அழகும், குறும்பும் நிறைந்த நடிகை நஸ்ரியா. நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மலையாளத்து வரவான நஸ்ரியா நசீம். இவரது அழகும், குறும்புத்தனமான நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சமீபத்தில் ராஜா ராணியில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. நடிப்பு எந்த அளவுக்கு பேசப்பட்டதோ அதே அளவு பரபரப்பும் நஸ்ரியா மீது சமீபத்தில் விழுந்தது.

சற்குணம் இயக்கிய நய்யாண்டி படத்தில் நடித்து அவர், அதன்பின்னர் அவர் கிளப்பிய தொப்புள் பிரச்னை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது ஜெய்யுடன் திருமணம் எனும் நிக்காஹ், வாய்மூடி பேசவும் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர மலையாளத்திலும் நிறைய படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார்.

இந்நிலையில் சினிமாவில் நடிக்க வந்தபிறகு சினிமாவில் சாதித்த பிறகு தான் திருமணம் செய்வேன் என்று சில நடிகைகளை போல் வயதை கடத்தாமல் நடிக்க வந்த குறுகிய காலத்திற்குள்ளேயே திருமணம் செய்ய முடிவு எடுத்துவிட்டார் நஸ்ரியா. ஆம் நஸ்ரியாவுக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது.

பிரபல மலையாள இயக்குநர் பாசிலின் மகன், பஹத் பாசிலை தான் நஸ்ரியா திருமணம் செய்ய இருக்கிறார். பஹத்தும் தற்போது மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோவாக உள்ளார். இருவரும் ''எல் பார் லவ்'' என்ற படத்தில் தற்போது நடித்து வருகின்றனர். இந்தபடத்தில் நடித்தபோது அவர்களுக்குள் காதல் மலர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. இருவரும் தங்களது வீட்டில் பேசி திருமணத்திற்கான சம்மதத்தை வாங்கிவிட்டனர். அத்தோடு திருமணம் நிச்சயமும் சில தினங்களுக்கு முன்னர் நடந்தேறியுள்ளது. திருமண தேதி முடிவு செய்யவில்லை, இருந்தாலும் ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். இத்தகவலை நஸ்ரியாவே கூறியுள்ளார்.

நஸ்ரியா தனது பேஸ்புக்கில், எனக்கும், பஹத் பாசிலுக்கும் திருமணம் நிச்சயம் நடந்துள்ளது, உங்களுடைய எல்லோரது வாழ்த்தும் தேவை என்றும் கூறியுள்ளார்.

இதேப்போல் பஹத்தின் தந்தை பாசிலும் இந்த திருமணத்தை உறுதிசெய்துள்ளார். இவர்களது திருமணம் ஆகஸ்ட்டில் நடப்பதாக கூறியுள்ளார்.

Jan 10, 2014

ஜில்லா - விமர்சனம்



ஊருக்கே தாதா மோகன் லால்.அவரோட டிரைவரோட பையன் தான் விஜய்.சின்ன வயசுல நடந்த ஒரு ரகளைல மோகன் லால் மனைவியின் உயிருக்கு வந்த ஆபத்தில் இருந்து விஜய் காப்பாத்துவதால் அவரைத்தன் வளர்ப்பு மகனாவே மோகன் லால் வளர்க்கிறார். விஜய்யோட நிஜ அப்பா ஒரு போலீஸ் ஆஃபீசர் கையால சாவதால் விஜய்க்கு சின்ன வயசுல இருந்தே போலீஸ்னாலே வெறுப்பு .

காஜில் அகர்வால் போலீஸ் ஆஃபீசர் .ஹீரோயின் போலீஸ்னு தெரியாம ஹீரோ பொண்ணுப்பார்க்கப்போறார்.போலீஸ்னு தெரிஞ்சதும் ஜகா வாங்கறார். அதை வெச்சுக்கொஞ்சம் காமெடி , கலாட்டான்னு படம் ஜாலியாத்தான் போகுது.

மோகன் லாலுக்கு போலீஸ்னாலே ஒரு சிக்கல் வருது. அப்போதான் அவர் முடிவெடுக்கறாரு, நாம ஆபத்தில்லாம தொழில் பண்ணனும்னா நம்மாளு ஒருத்தன் போலீஸ் ஆஃபீசரா இருக்கனும்னு. விஜய் அசிஸ்டெண்ட் கமிஷனரா ஆகிடறார்.

ஹீரோ போலீஸ் ஆனதும் மனசு மாறிடறார்.

விஜய்க்கும் ,மோகன் லாலுக்கும் முட்டிக்குது.இடைவேளை.

தலைவா தோல்வியால் துவண்டு போன விஜய்க்கு இது பூஸ்ட் அப் குடுக்கும் படம் தான்.

மோகன் லாலின் கம்பீரமான நடிப்பு , கணீர்க்குரல் அவருக்கு பெரிய பிளஸ்.பல காட்சிகளில் அநாயசமான நடிப்பு .விஜய் , மோகன் லால் காம்போ காட்சிகளில் மோகன் லாலுக்கு நல்ல முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கு .

விஜய் இந்தப்படத்தில் ரொம்ப இளமையா , அழகா , புதுப்புது மேனரிசத்தோட ,வசன உச்சரிப்பில் சில மாற்றங்களோட வர்றார். தேவை இல்லாத பஞ்ச் டயலாக்ஸ் எதுவும் பேசாம கனகச்சிதமான நடிப்பு .

போக்கிரி படத்தில் போலீஸாக வந்தாலும் யூனிஃபார்மில் அவரை அதிக நேரம் பார்க்க முடியாத ரசிகர்களுக்கு இதில் பாயாசத்துடன் விருந்து . போலீஸ் யூனிஃபார்மில் கலக்கிட்டார்.

பாடல் காட்சிகளில் வழக்கமான விஜய் துள்ளாட்டம் போட்டிருக்கிறார். காவலன் படத்தில் அசினின் பின்னால பதம் பார்த்தவர் இதில் காஜல் பின்னாடி போய் பின்னால பரோட்டா பண்றார். இனி விஜய் ரசிகர்கள் காதலிகளிடம் இதைச்சொல்லியே பரோட்டா ஆர்டர் செய்வாங்கனு எதிர்பார்க்கலாம்.

புரோட்டா சூரி அப்பப்ப மொக்கை போட்டாலும் 4 இடங்களில் சிரிக்க முடியுது.

முன் பாதி திரைக்கதையில் இருந்த வேகம் பின் பாதியில் இல்லை . கடைசி 30 நிமிடங்கள் இழுவை . மொத்த படம் 3 மணி நேரம் என்பதால் ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டி இருக்கு. எடிட்டிங்கில் இன்னும் ட்ரிம் பண்ணி இருக்கலாம்.

விஜய் ஒரு பாட்டு பாடி இருக்கார். நல்ல வாய்ஸ் . குத்தாட்டத்தை விட மெலோடியை அதிகம் நம்பிய இமானுக்கு பாராட்டு

படம் முழுக்க ஆங்காங்கே வரும் ஜில்லா ஜில்லா தீம் இசை ரசிகர்களிடையே பலத்த ஆரவாரம் பெறுகிறது

Jan 9, 2014

ரொமான்ஸ் காட்சிக்கு யாரும் டூப் போடுவதில்லையே? சண்டை காட்சிக்கு மட்டும் ஏன் - அஜீத்


சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள வீரம் படம் நாளை திரைக்கு வருகிறது. அதனால் அரக்க பரக்க ரிலீஸ் வேலைகளில் தீவிரமடைந்துள்ளது வீரம் டீம். இந்த நிலையிலும் அப்படம் பற்றிய கடைசி பேட்டியாக சிலர் டைரக்டர் சிவாவை துரத்திக்கொண்டு வருகின்றனர்.

அப்போது சிலர், ரயில் சண்டை காட்சியில் அஜீத் எடுத்த ரிஸ்க் பற்றி அவரிடத்தில் கேட்டதற்கு, அதுதான் படத்தின் ஹைலைட்டே. ரயில் ஓடிக்கொண்டிருக்கும்போது சண்டை நடக்கிறது. அப்போது ஒரு கையால் சண்டை செய்து கொண்டே இன்னொரு கையால் ஒவ்வொரு கம்பியாக பிடித்து செல்ல வேண்டும். இதில் நடிப்பதில் ரிஸ்க் என்பதால், டூப் நடிகரை வைத்து எடுத்து விட நினைத்தேன். ஆனால் அஜீத் குறுக்கிட்டு, அதுல என்னதான் ரிஸ்க் இருக்குன்னு பாத்திடுவோமே என்று வரிந்து கட்டிக்கொண்டு இறங்கினார். இதனால் அந்த காட்சியை படமாக்கி முடிக்கிற வரைக்கும் ஒரே பயம். ஆனால், ஓடிக்கொண்டிருந்த ரயிலில் சண்டை போட்டபடி ஒவ்வொரு கம்பியாக லாவகமாக பிடித்தபடி நடித்தார் அஜீத்.

அந்த காட்சியை முடித்து விட்டு வந்தபோது, ஏன் சார் இப்படியெல்லாம் தேவையில்லாம ரிஸ்க் எடுக்கிறீங்க? என்று கேட்டபோது, நான்தானே ஹீரோ. அப்ப நான்தானே வில்லன்களை அடிக்கனும். அதை விட்டுட்டு டூப் நடிகரை வச்சு அந்த காட்சியை படமாக்கினால் எப்படி என் ஹீரோயிஸம் முழுமை பெறும் என்றாராம் அஜீத். அதோடு, கதாநாயகியை கட்டிப்பிடிச்சு நடிக்கிற ரொமான்ஸ் காட்சியிளெல்லாம் ஹீரோ நடிச்சுட்டு, சண்டை மாதிரியான ரிஸ்க்கான காட்சிகளை டூப் நடிகருங்ககிட்டு விடுறது எந்த விதத்திலும் நியாயமே இல்லை. அதனால்தான், லாபமோ நஷ்டமோ எதுவாக இருந்தாலும் நானே பார்த்திடுறதுங்கிற முடிவுக்கு இறங்கிட்டேன் என்றாராம்.

Jan 7, 2014

பிரபல தெலுங்கு நடிகர் தற்கொலை



டிஜிட்டில் சினிமாவின் வருகைக்குப் பிறகு சினிமாவுக்கு மாதத்துக்கு பத்து புது ஹீரோக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதயகிரண் தற்கொலை சில பாடங்களை நடத்தி விட்டுச் சென்றிருக்கிறது.


ஆந்திர மாநிலத்தின் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் உதய்கிரண். பிறப்பிலிருந்தே அழகு. அந்த அழகுதான் அவருக்குள் சினிமா ஆசையை தூண்டியது. உடன் இருந்த நண்பர்களும் அந்த ஆசையை உரம்போட்டு வளர்த்தார்கள். கல்லூரி படிப்பை முடித்ததும் சினிமாவுக்குள் நுழைய ஏதுவாக மாடலிங் செய்ய ஆரம்பித்தார். மாடலிங் உலகில் தனித்த அடையாளத்தோடு வளர்ந்தவர் ஒரு ஆங்கில குறும்படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கின் முன்னணி இயக்குனர் தேஜாவின் கவனத்துக்கு வந்தார். அவருடைய இயக்கத்தில் உதய்கிரண் நடித்த சித்திரம். சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.


ஒரே படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவின் உச்சத்துக்கு போனார். இளம் பெண்கள், கல்லூரி மாணவிகளின் கனவு நாயகன் ஆனார். அடுத்து நடித்த நுவ்வு நேனு, மனசந்தே நுவ்வே படங்களும் சேர்ந்து ஹாட்ரிக் ஹிட்டடிக்க கமர்ஷியல் மசாலாவுக்குள் சிக்கிக் கிடந்த தெலுங்கு சினிமாவை இளைஞர்களின் காதல் களமாக்கினார். நுவ்வு நேனு படத்திற்காக அவர் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்றார்.


உதய் கிரணின் இந்த அசுர வளர்ச்சி ஆந்திர சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியின் மகள் சுஷ்மிதாவின் கவனத்தை ஈர்த்தது. அவரை காதலிக்க ஆரம்பித்தார். தன் வீட்டு மருமகனாக்க சிரஞ்சீவியும் விரும்பினார். 2003ம் ஆண்டு தன் மகள் சுஷ்மிதாவுக்கு உதய்கிரணை மணம் முடிக்க நிச்சயம் செய்தார். நிச்சயதார்த்த விழாவும் கோலாகலமாக நடந்தது. இடையில் என்ன நடந்தது என்றே தெரிவில்லை. நிச்சயதார்த்தத்தை முறித்தார் சிரஞ்சீவி. தன்னை வீட்டோடு மாப்பிள்ளையாக்க முயன்றது உதய்கிரணுக்கு பிடிக்கவில்லை என்று ஒரு காரணமும், சிரஞ்சீவி மகள் வேறொருவரை காதலித்ததால் இந்த திருமணத்தை ஏற்கவில்லை என்று ஒரு காரணமும் சொல்லப்பட்டது. மூன்றாவதாக ஒரு காரணமும் இருக்கலாம். எது உண்மை என்று யாருக்கும் தெரியாது. ஆனால் இந்த திருமண நிச்சயதார்த்தமும், அதன் முறிவும்தான் உதய்கிரண் வாழ்க்கையை அப்படியே புரட்டிப் போட்டது.


சிரஞ்சீவியால் நிராகரிக்கப்பட்டதால் அவரை பகைத்துக் கொண்டு யாரும் உதய்க்கு பட வாய்ப்பு தர முன்வரவில்லை. அவர் நடித்துக் கொண்டிருந்த படங்கள் அனைத்தும் அடுத்தடுத்து தோல்வியை தழுவியது. தெலுங்கில் இனி வாழ முடியாது என்று தமிழ்நாட்டுக்கு வந்தார்.

நேராக கே.பாலச்சந்தர் வீட்டிற்கு சென்ற அவரிடம் தன் சோக கதையை சொல்லி அழுதார். நல்ல வாய்ப்பு வரும்போது அழைப்பதாக சொன்னார். பிரகாஷ்ராஜ் பொய் படத்தை தயாரித்தபோது அதில் உதய்யை ஹீரோவாக்கினார். உதய்யின் துரதிர்ஷ்டம் தமிழ்நாட்டிலும் தொடர்ந்தது.


பொய் தோல்வி அடைந்தது. அதன் பிறகு தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில் வம்புசண்ட படத்தில் நடித்தார். அதன் பிறகு, சித்திரம், பெண் சிங்கம் படங்களில் நடித்தார். எந்த படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. மீண்டும் தெலுங்கிற்கே சென்றார். இரக்கப்பட்ட சிலர் கொடுத்த வாய்ப்பும் தோல்வியில் முடிந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மனஆறுதல் வேண்டி தன் தோழி வஷிதாவை திருமணம் செய்து கொண்டார்.


அதன் பிறகு சொந்த வாழ்க்கை தோல்விகள் துரத்தியது. பாசத்திற்குரிய அம்மாவின் மரணம். அந்த ஈரம் காய்வதற்குள் அப்பா செய்து கொண்ட மறுமணம் எல்லாமே உதயை துரத்தி துரத்தி அடித்தது. இறுதியில் மரணமே எல்லாவற்றும் தீர்வு என்று முடிவு செய்துவிட்டார்.


தோல்வி என்பது வாழ்க்கையின் ஒரு சம்பவம்தானே தவிர அது முடிவல்ல. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த உதய் சினிமா நட்சதிரமானதே சாதனை தானே. அதற்குமேல் என்ன வேண்டும். லட்சக்கணக்கான இளைஞர்கள் சினிமா கனவோடு திரியும்போது கேமரா முன் நிற்கும் பாக்கியம் பெற்ற அனைவருமே சாதனையாளர்கள்தான். வெற்றி தோல்வி என்பது அடுத்ததுதான். இன்றைக்கு சினிமாவுக்கு வரும் இளைஞர்களுக்கு உதய் நடத்தி சென்றுள்ள பாடம் இது.

தெலுங்கில் பின்வாங்கியது அஜீத்தின் வீரம்!


சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள வீரம் படம் வருகிற 10-ந்தேதி திரைக்கு வருகிறது. இதனால் தமிழகமெங்கிலும் பரபரப்பாக பப்ளிசிட்டியை முடுக்கி விட்டுள்ளனர். மேலும், தமிழில் வெளியாகிற அதே நாளில் வீரு டொக்கடே என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியிட திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், இப்போது தமிழில் ரிலீஸ் செய்து விட்டு இரண்டு வாரங்கள் கழித்து ஆந்திராவில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். என்ன காரணம்? என்று விசாரித்தபோது, ஜனவரி 10-ந்தேதி ஆந்திராவில் சங்கராந்தி என்பதால் அங்குள்ள பிரபல ஹீரோக்களான மகேஷ்பாபு நடித்த 1, ராம்சரண் நடித்த எவடு ஆகிய படங்கள் வெளியாகிறதாம். அதனால் பிரமாண்ட தியேட்டர்கள் அனைத்தையும் அவர்களே கைப்பற்றி விட்டார்களாம்.
ஆக, அஜீத் படத்துக்கு எதிர்பார்த்த தியேட்டர்கள கிடைக்காததால் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளனர். மேலும், சிறுத்தை சிவா இயக்கிய சில தெலுங்கு படங்கள் ஹிட்டாகியிருப்பதோடு, தமன்னா வீரம் படத்தில் நாயகியாக நடித்திருப்பதால், தெலுங்கிலும் அஜீத்தின் கொடி பறக்க நிறைய வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால், அங்குள்ள ஹீரோக்களுடன் போட்டிக்கோதாவில் இறங்கினால், கிடைக்கிற வசூலும் இல்லாமல் போய் விடும் என்பதால் புத்திசாலித்தனமாக ரிலீஸ் தேதியை பின்தள்ளி வைத்திருக்கிறார்களாம்.

Dec 21, 2013

இவன் வேற மாதிரி - விமர்சனம்

பெரும் சினிமா பின்னணி கொண்ட விக்ரம் பிரபுவின் இரண்டாவது படம்.., "எங்கேயும் எப்போதும் முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குநர் எம். சரவணனின் இரண்டாவது படம்.. என ஏகப்பட்ட "இரண்டாவது.. எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்தாலும் இந்த வாரத்திலும், இன்னும் சில வாரங்களிலும் முதல் இடத்தைப் பெற "முத்தாய்ப்பாய் வந்திருக்கும் திரைப்படம் தான் "இவன் வேற மாதிரி.

கதைப்படி சென்னை சட்டக்கல்லூரியில் சில வருடங்களுக்கு முன் போலீஸ் கண் எதிரே அவர்கள் கைகட்டி வேடிக்கை பார்க்க நடந்தேறிய கொலை வெறி மாணவர் அடிதடி தான் "இவன் வேற மாதிரி படத்திற்கான அடி நாதம்! அந்த வன்முறை சம்பவத்தில் வெகுண்டெழும் விக்ரம் பிரபு, அந்த அடிதடிக்கு காரணமான பதவி வெறிபிடித்த சட்ட அமைச்சர் உள்ளிட்ட சகலமானவர்களையும் புரட்டி எடுத்து சட்டத்தின் முன் நிறுத்துவதும், சாட்சியே இல்லாமல் கொல்வதும் தான் இவன் வேற மாதிரி படத்தின் மொத்த கதையும்!

இத்தனைக்கும் விக்ரம் பிரபு, சம்பந்தப்பட்ட சட்டக்கல்லூரி மாணவரா என்று கேட்டால் அதுதான் இல்லை. அப்புறம் பின்னே..?! அவர் "விஸ்காம் முடித்து சின்ன சின்ன போட்டோ கிராபி வேலைகள் செய்யும் புகைப்பட கலைஞர். அவருக்கு சட்டக்கல்லூரி அடிதடியில் ஆக்ரோஷம் பீறிடுவதற்கான காரணம் என்ன? எனும் கதையுடன், கதாநாயகி சுரபி, விக்ரம் பிரபுவின் காதலையும் (அப்போ நாயகி சுரபி சட்டக்கல்லூரி மாணவியாக்கும்... என நீங்கள் நினைத்தால்... அதுவும் இல்லை..என்பது தான் ஸ்கிரீன்பிளே மேஜிக்!) கலந்து கட்டி கலர்புல்லாக அதே நேரம் லவ், ஆக்ஷன், சென்டிமென்ட் திரில்லராக இவன் வேற மாதிரி திரைப்படத்தை புதுமாதிரியாக தந்திருக்கிறார் இயக்குநர் எம். சரவணன். அதற்காக அவருக்கு ஒரு ஹேட்ஸ் ஆப் சொல்லியே ஆக வேண்டும்!

இயக்குநர் எம். சரவணனின் எதிர்பார்ப்பை அவர் கற்பனையில் உருவாக்கிய குணா "அலைஸ் குணசேகரன் பாத்திரமாகவே மாறி நடித்து, அடித்து உடைத்து தூள் பரத்தியிருக்கிறார் விக்ரம் பிரபு. "கும்கியில் ஒரு மாதிரி விக்ம் பிரபு என்றால் இதில் "வேற மாதிரி விக்ரம்! பிரபு (இளைய திலகத்தை சொன்னோம்..!) கவலையை விடுங்கள் குட்டி 16 அடி அல்ல தாத்தா நடிகர் திலகத்திற்கும் சேர்த்து 64 அடி பாயும்!

புதுமுகம் சுரபி டில்லி பொண்ணாம்! செவத்த சேலத்து பக்கம் பொண்ணு மாதிரி மாலினியாகவே மாறி நடிப்பில் பொளந்து கட்டியிருக்கிறார். அதுவும் விக்ரம் பிரபு தந்த மீன்களும் தொட்டியும் கையுமாக முன்பாதியில் கடும் காதல் தவம் புரியும் அம்மணி, பின் பாதியில் தன் காதலன் ஒரு நல்ல விஷயத்திற்காக அமைச்சர் தம்பி அண்ட் கோவினரை அடித்து, அடைத்து உதைத்திருக்கிறார் என தெரிந்ததும் அதை காட்டிக்கொள்ளாமல் விக்ரமை தொடர்ந்து காதலித்து வில்லனின் கைகளில் சிக்கி உண்மையை சொல்ல மறுத்து திருஷ்டி பொம்மையாகும் இடங்கள் கண்ணீர் இல்லாதோர் கண்களையும் கரைத்து விடும்!.

அரவிந்தன் ஐ.பி.எஸ்., ஆக கணேஷ் வெங்கட்ராமன், சட்டத்துக்கு புறம்பான சட்ட அமைச்சராக வள்ளி ஹரிராஜன், அவரது தம்பியாக வம்சி கிருஷ்ணா, அம்மா சார்மிளா, புதிய அப்பாக்கள், நாயகியின் புதுமுக தங்கை எல்லோரும் பாத்திரமறிந்து பளீச்சிட்டிருக்கிறார்கள்.

சி. சத்யாவின் இசையில் லவ்வுல... லவ்வுல விழுந்துட்டேன்... என்னை மறந்தேன் இது தான் உள்ளிட்ட ஆறு பாடல்களும் எங்கேயும் எப்போதும் பட சாயலிலேயே இருந்தாலும் அதுவும் இவன் வேற மாதிரி படத்துக்கு ப்ளஸ் தான்! சக்தியின் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் சக்தி கூட்டுகிறது. சண்டை பயிற்சியாளர் ராஜசேகரின் அதிரடியும் அசத்தம்!

நாயகி சுரபியை காணோம் என போலீஸ் ஸ்டேஷன் வரும் இரு வீட்டு பெற்றோரிடமும், போலீசார் இந்த காதலன் இல்லாமல் பொண்ணுக்கு வேறு காதலர் யாரும் உண்டா? எனக் கேட்டு விட்டு, இப்படி கேட்கறதால எங்களை மாதிரி போலீஸை தப்பா நினைக்காதீங்க... உங்க பொண்ணை பத்தி உங்களுக்கு நல்ல அபிப்ராயம் தான் இருக்கும். ஆனா அந்தப் பொண்ணை தேட இதுமாதிரி டீடெயில் எல்லாம் உதவியா இருக்கும் எனும் வசனத்தில் ஆகட்டும், விக்ரம் பிரபு - சுரபி வீட்டினர் இவர்கள் காதல் தெரிந்து முதன் முதலில் சந்திக்கும் காட்சியில், இவர் வீட்டினருக்கு அவரும், அவர் வீட்டினருக்கு இவரும் குடிக்க ஏதோ பானம் எடுத்து செல்லுகின்ற காட்சியில் ஆகட்டும் புரட்சி படைத்திருக்கிறார் இயக்குநர்.

அதேநேரம் முன்பாதியில் தெரியும் சற்றே குறைவான வேகம், வாட்ச் மேன் கொலையை தாமதமாக துப்பு துலக்குவது உள்ளிட்ட ஒரு சில குறைகள் இருந்தாலும் "இவன் வேற மாதிரி - ரொம்ப புது மாதிரி.!